×

கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயமான பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சார்ந்த மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், இப்பகுதி மக்கள் அதிகமாக வசிக்கும் மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 213 தொடக்கப் பள்ளிகள், 22 நடுநிலைப் பள்ளிகள், 20 உயர்நிலைப் பள்ளிகள், 40 மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 3 உண்டு உறைவிடப் பள்ளிகள் என 298 பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் பல்லாண்டு காலமாக இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 27,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியரின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிரமலைக் கள்ளர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் கல்வியறிவு பெற்று உயர் நிலையை அடைய வேண்டுமென்ற நோக்கத்தின் அடிப்படையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்ற நிலையில், இந்தச் சமுதாயத்தைச் சார்ந்த மக்கள் அரசுப் பணிகளிலும், தனியார் நிறுவனங்களிலும் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர்.

இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையோடு இணைப்பது என்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதிக்க வேண்டுமென்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

The post கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள்; மிகப் பிற்படுத்தப்பட்டோர் துறையின்கீழ் இயங்க அனுமதி: ஓபிஎஸ் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Kallar Remedial Schools ,Chennai ,Former ,Chief Minister ,O. Panneerselvam ,Kallar ,Pramala ,Madurai ,Theni ,Dindigul ,OBC ,OPS ,Dinakaran ,
× RELATED ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல் அரசு...